திண்டுக்கல் பிரபல நகைக்கடையில் ஊழியர்களே கைவரிசை – ரூ.1.43 கோடி மதிப்பிலான தங்கம் திருட்டு

திண்டுக்கல் மாநகரின் மையப்பகுதியான வரதராஜ் காம்ப்ளக்ஸில் இயங்கி வரும் ஒரு பிரபல நகைக்கடையில், அந்த நிறுவனத்திலேயே பணிபுரியும் ஊழியர்கள் திட்டமிட்டு ரூ.1 கோடியே 43 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்க நகைகளைக் கையாடல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி தொடர்பாகக் கடையின் துணை பொது மேலாளர் ரேணுகேசன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமாக விற்பனை நேரம் முடிந்தவுடன் ஒவ்வொரு தளத்திலும் உள்ள நகைகளைச் சரிபார்ப்பது கடையின் நடைமுறையாகும். அதன்படி, கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி ஊழியர் வைஷ்ணவி என்பவர் தரைத்தளத்தில் உள்ள நெக்லஸ் பிரிவைத் தணிக்கை செய்தபோது, சுமார் 45 தங்க நெக்லஸ்கள் மாயமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 1,586 கிராம் (சுமார் 1.5 கிலோ) எடையுள்ள இந்த நகைகளின் மதிப்பு ரூ.1,43,23,022 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் துணிகரத் திருட்டு குறித்து கடையின் உள்ளேயே ரகசிய விசாரணை நடத்தப்பட்டதில், கடையின் தரைத்தள மேலாளர் பாலசுப்பிரமணியன் விடுமுறையில் இருந்த காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பொறுப்பு மேலாளராக இருந்த சிவா என்பவர் இதற்கான சதித்திட்டத்தைத் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்தது. காசாளர் கார்த்திகேயன் மற்றும் விற்பனையாளர் விநாயகன் ஆகியோருடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்குப் புதிய மாடல்களைக் காண்பிப்பதாகக் கூறி சிறுகச் சிறுக நகைகளை வெளியே எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கு உடந்தையாகக் காசாளர்கள் பாண்டியன், சரவணக்குமார், கார்த்திக் மற்றும் நகை மதிப்பீட்டாளர் செல்வராஜ் ஆகியோர் செயல்பட்டுள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, திருடப்பட்ட நகைகளைச் ‘சேதமடைந்த நகைகள்’ (Damaged Jewels) என போலி கணக்குக் காட்டி விற்று, அந்தப் பணத்தை அனைவரும் தங்களுக்குள் பங்கு பிரித்துக் கொண்ட அதிர்ச்சித் தகவலும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. குமரேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாகத் தலைமை விற்பனையாளர் சிவா, காசாளர் கார்த்திகேயன் மற்றும் விற்பனையாளர் விநாயகன் ஆகிய மூவரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 கிராம் தங்க நகைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள மீதமுள்ள நான்கு ஊழியர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டிய ஊழியர்களே, கடையின் கணினி மற்றும் தணிக்கை நடைமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டிருப்பது வணிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version