ராமநாதபுரம் :
சமூகநீதிப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம் இன்று பரமக்குடியில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பரமக்குடியில் உள்ள நினைவு இடத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஊடகங்களுக்கு பேசிய உதயநிதி ஸ்டாலின்,
“தியாகி இமானுவேல் சேகரனாருக்கு 2 மாதங்களில் சிலையும் மணிமண்டபமும் திறக்கப்படும். பரமக்குடியில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைக்கும் பணி 95% நிறைவடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
நினைவு தினத்தையொட்டி, மாவட்டம் முழுவதும் பி.என்.எஸ்.எஸ். 163 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல்துறை சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் தலைமையில் 1 ஐஜி, 4 டிஐஜிக்கள், 24 எஸ்பிக்கள், 32 ஏடிஎஸ்பிக்கள், 70 டிஎஸ்பிகள் உட்பட மொத்தம் 7,435 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட 161 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வாகனங்களில் மேற்கூரையில் ஏறி பயணிக்கக் கூடாது என்றும், நினைவிடத்திற்கு இருசக்கர வாகனங்களில் வருவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிமுகவிற்கு தடைவிதிப்பு
நினைவு தினத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அதிமுக சார்பில் யாரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்க முடியாது என தேவேந்திர பண்பாட்டு கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும், இவ்விஷயத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. மீறி வருகை தரும் பட்சத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என அந்த கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.