சென்னை :
தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெறும் நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் இந்த கல்வியாண்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை அக்டோபர் மாதத்திலேயே வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு, தேர்தல் காலத்துடன் தேர்வுகள் மோதும் சூழல் உருவாகியுள்ளதால், தேர்வுத்துறை அட்டவணை வெளியீட்டை சில நாட்கள் தாமதப்படுத்தி உள்ளது.
தேர்தல் காலத்தில் ஆசிரியர்கள் பெரும்பாலும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால், பள்ளிகளில் தேர்வுகளை நடாத்துவது சிரமமாகும். இதனால், தேர்வுகளை மார்ச் மாதத்திலேயே முடித்து வைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கான அட்டவணை தற்போது தயாராகி அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு ஒப்புதலுக்குப் பிறகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரப்பூர்வமாக அட்டவணையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பகமான வட்டாரங்களின் தகவல்படி, பொதுத் தேர்வு அட்டவணை நவம்பர் 4-ந்தேதி வெளியிடப்படும் வாய்ப்பு உள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோதும், தேர்வுகள் மார்ச் மாதத்திலேயே நடத்தப்பட்டன. அப்போது பிளஸ்-2 தேர்வு மார்ச் 1 முதல் 22 வரை, 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்றது.
இந்த முறை சட்டமன்றத் தேர்தல் காலத்துக்கு முன்னதாகவே அனைத்து தேர்வுகளும் முடிக்கப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
			
















