“இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது” என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் வருடாந்திர சட்ட மாநாட்டில் பங்கேற்ற ராகுல் காந்தி, “2014ம் ஆண்டு முதல் தேர்தல் முறையில் ஏதோ தவறு நடந்துகொண்டு இருக்கிறது என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக, குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இருந்து அதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தன” என தெரிவித்துள்ளார்.
மேலும், “ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றிபெற முடியாமல் போனது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இது எவ்வாறு சாத்தியமாகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“நாங்கள் இதுபற்றி பேசும்போது, மக்கள் ஆதாரம் எங்கே என்று கேட்கிறார்கள். மகாராஷ்டிரா நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், அதைத்தொடர்ந்து நான்கு மாதங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றியல்ல, நேரடியாக களத்திலிருந்து தூக்கி எறியப்பட்டோம். மூன்று வலிமையான கட்சிகள் ஒரு கூட்டு அமைப்பாக இருந்தும், திடீரென அவை காணாமல் போனது மிக அதிர்ச்சியானது,” என்றும் அவர் கூறினார்.