பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தேர்தல் கமிஷன் அழைப்பு

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி, உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் இன்றும் நாளையும் (டிசம்பர் 27, 28) மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

உடுமலை மற்றும் மடத்துக்குளம்: வரைவு பட்டியல் நிலவரம் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் பின், கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. உடுமலை தொகுதியில் முன்னதாக 2,72,014 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 19.1 சதவீத வாக்காளர்கள் (சுமார் 51,700 பேர்) பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி உடுமலையில் 1,05,368 ஆண்கள், 1,14,926 பெண்கள் மற்றும் 23 திருநங்கைகள் என மொத்தம் 2,20,317 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல், மடத்துக்குளம் தொகுதியில் 15 சதவீத வாக்காளர்கள் (36,600 பேர்) நீக்கப்பட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவுப் பட்டியலில் 99,772 ஆண்கள், 1,07,088 பெண்கள் மற்றும் 18 திருநங்கைகள் என மொத்தம் 2,06,878 வாக்காளர்கள் உள்ளனர். நீக்கப்பட்டவர்களில் தகுதியுள்ள நபர்கள் மீண்டும் தங்களை இணைத்துக் கொள்ளவும், புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யவும் இந்தச் சிறப்பு முகாம்கள் ஒரு முக்கிய வாய்ப்பாகும்.

முகாம்களில் வழங்கப்படும் சேவைகள் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு ‘படிவம்-6’, பெயர் நீக்கத்திற்கு ‘படிவம்-7’ மற்றும் முகவரி மாற்றம், திருத்தங்கள் அல்லது மாற்றுத்திறனாளி என அடையாளப்படுத்துவதற்கு ‘படிவம்-8’ ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும், சேதமடைந்த அல்லது பழைய அடையாள அட்டைகளுக்குப் பதிலாகப் புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) கோரியும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பொள்ளாச்சி தொகுதியைப் பொறுத்தவரை, வரைவு பட்டியல் குறித்த ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை வழங்க ஜனவரி 18-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் ஆங்காங்கே தகவல் பலகைகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version