சென்னை:
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் MGNREGA தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பிய பிறகே, MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிட வேண்டும் என, ‘பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்’ தனது ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருப்பது தவறான தகவல் என சுட்டிக்காட்டிய முதல்வர், “125 நாட்கள் என்பது காகிதத்தில் மட்டுமே இருக்கப்போகிறது என்பதை பலரும் ஏற்கனவே கூறியுள்ளனர். இதனை அறியாதவராக அவர் பேசுகிறாரா?” என கேள்வி எழுப்பினார்.
மக்கள் தொகைக் கட்டுப்பாடு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு சாதனை படைத்ததற்கே தண்டனையாக, தொகுதி எண்ணிக்கையும், வேலை நாட்களும் குறைக்கப்படும் அபாயம் இருப்பதாக தான் ஏற்கனவே எச்சரித்திருந்ததை, எதிர்க்கட்சித் தலைவர் வசதியாக மறந்துவிட்டதாகவும் முதல்வர் குற்றம் சாட்டினார்.
மேலும், ஒன்றிய அரசின் முழு நிதியுடன் செயல்பட்டு வந்த MGNREGA திட்டத்தை மாற்றி, மாநில அரசுகள் நிதிச்சுமையை ஏற்க வேண்டிய வகையில் ‘விக்சித் பாரத் கிராமின் ரோஜ்கார் அபியான்’ (VBGRAMG) திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், இதற்கு எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பாரா எனவும் முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
VBGRAMG குறித்து கேள்விகள்
இதற்கு முன்பாகவும், VBGRAMG திட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த முதல்வர், “கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டம் குறித்து, அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன?” என கேள்வி எழுப்பியிருந்தார். MGNREGA திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கி, இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்படுவது குறித்தும், இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மௌனம் காக்கிறாரா எனவும் விமர்சனம் செய்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி பதில்
இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில், 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை” என குற்றம் சாட்டினார்.
மேலும், மத்திய அரசு தற்போது வேலை நாட்களை 125 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதை வரவேற்பதாக தெரிவித்த அவர், “MGNREGA திட்டத்தின் பெயர் எந்த மாற்றமுமின்றி தொடர வேண்டும்” என மத்திய அரசை வலியுறுத்தினார்.
இந்த நிலையில், MGNREGA திட்டத்தின் எதிர்காலம், VBGRAMG திட்டத்தின் தாக்கம், மற்றும் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு ஆகியவை தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
