“ஸ்டாலின் சொன்னதை ஸ்டாலினுக்கே காட்டிய எடப்பாடி” – பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு !

திமுக அரசு, செந்தில் பாலாஜி, மற்றும் ஸ்டாலின் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார்.

டெல்லி பயணத்தை முடித்து சென்னை திரும்பிய அவர், இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “அமித் ஷாவை சந்திக்க கார் மாறி சென்றேன் என்பது தவறான செய்தி. நான் என் அதிகாரப்பூர்வ காரிலேயே சென்றேன். மேலும், முகத்தை கைக்குட்டையால் துடைத்த காட்சியை வைத்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன” என்று விளக்கம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின், “செந்தில் பாலாஜி கொடுத்தால் ரோடே போட்டு விடுவார்” என்று பாராட்டியதை சுட்டிக்காட்டி, “இதே செந்தில் பாலாஜியை, அவர் அதிமுகவில் இருந்தபோது ஸ்டாலின் ஊழல்வாதி என்று கடுமையாக தாக்கினார். அப்போது சொன்னதை மக்கள் மறக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.

இதற்காக அருகில் இருந்த நிர்வாகியிடம் இருந்து டேப்லெட்டை எடுத்து, ஸ்டாலின் பழைய பேச்சைக் காட்ட முயன்றார். ஆனால் முதலில் வீடியோ சரியாக பிளே ஆகாததால், ஆடியோ மட்டுமே ஒலித்தது. இதனால் சிறிது பதற்றம் அடைந்த எடப்பாடி, “என்னடா இது” என்று சினம் வெளிப்படுத்தினார். பின்னர் வீடியோ சரி செய்யப்பட்டதும், முழுமையாக பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

அதன் பின் எடப்பாடி, “ஸ்டாலின் கூறியிருக்கும் பல வீடியோக்கள் எங்களிடம் இருக்கின்றன. இன்று அவர் பாராட்டும் செந்தில் பாலாஜியை, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மிகக் கடுமையாக தாக்கியுள்ளார். ஊழல் வழக்குகளில் சிக்கியவரை முக்கிய அமைச்சராக வைத்திருப்பது திமுகவின் நிலையை காட்டுகிறது. திமுகவில் வேறு திறமையானவர்கள் இல்லையா ? இப்படிப்பட்டவர்களை வைத்து எங்களை விமர்சிக்க அவர்களுக்கு தகுதியே இல்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

Exit mobile version