சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூலை 18ஆம் தேதி சோதனை நடத்தினர். இந்தச் சோதனை, அவரது மகன் சைதன்யா பாகல் தொடர்புடைய மதுக் கொள்கை மோசடி வழக்கில் நடக்கிறது.
துர்க் மாவட்டம் பிலாய் நகரில் உள்ள பாகல் வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனை குறித்து அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள், பூபேஷ் பாகலுக்கு ஆதரவாக அவரது இல்லம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டது.
இந்தச் சோதனை நடந்த நாள், பூபேஷ் பாகலின் மகன் சைதன்யாவின் பிறந்த நாள் என்பதையும், அதைப் பகிர்ந்தும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
“மகனின் பிறந்த நாளில் இந்தப் பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி. உலகில் எந்த ஜனநாயகத்திலும் இப்படி ஒரு பிறந்தநாள் பரிசு கிடைக்காது. இந்த நிகழ்வை நான் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்,” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுக் கொள்கை முறைகேடு விவகாரம் சத்தீஸ்கர் அரசியலை மேலும் பரபரப்பாக்கும் வகையில் அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பூபேஷ் பாகல் மீது தொடரப்படும் இந்த நடவடிக்கையை, அவரது ஆதரவாளர்கள் அரசியல் பழிவாங்கல் என புகார் கூறி வருகின்றனர்