தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அதிநவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பயங்கரவாதத் தாக்குதலின் நேரடி விளைவாக, தமிழகத்தின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் ஒன்றான திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பயணிகள் உடைமைகள் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கடந்த திங்கட்கிழமை இரவு (நவம்பர் 10) செங்கோட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹூண்டாய் ஐ20 ரக கார் ஒன்றில் பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தத் துயரச் சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தச் சம்பவம் ‘திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, தேசியப் புலனாய்வு முகமை (NIA), NSG உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தக் கொடூரச் செயலுக்குப் பின்னால், மருத்துவர் உமர் முகமது நபி என்ற தீவிரவாதி சம்மந்தப்பட்டிருப்பதும், ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தொடர்புகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்து நாட்டையே உலுக்கியுள்ளது. டெல்லியில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, நாசகாரச் செயல்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் இன்று அதிகாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.
ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ரயில்வே காவல்துறை (GRP) வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் (Bomb Disposal Squad) ஆகியோர் இணைந்து ரயில் நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதிலும் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்த மற்றும் இங்கிருந்து புறப்பட்ட அனைத்து ரயில் பெட்டிகளிலும் போலீசார் ஏறிச் சோதனை நடத்தினர். ரயிலில் பயணம் செய்யக்கூடிய ஒவ்வொரு பயணிகளின் உடமைகளும் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டப் பிறகே அவர்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், நவீனக் கருவிகளைக் கொண்டு, பயணிகளின் உடமைகளையும், சரக்குகளாக வந்த பார்சல்கள் உள்ளிட்டவைகளையும் தீவிரமாகச் சோதனை செய்தார்கள். பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் மற்றும் நடைமேடைகள் அனைத்தும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டன. நாட்டின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும் இந்த உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















