நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஊட்டியில், ‘இ-பாஸ்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டும் நெரிசல் குறையாததால், அந்த திட்டமே தோல்வி அடைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஊட்டியில் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வாகன நெரிசலை தவிர்க்கும் நோக்கில், தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 2024 மே 7 முதல் ‘இ-பாஸ்’ (E-Pass) முறை அமல்படுத்தப்பட்டது. இதற்காக, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஊட்டி செல்லும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
சீசன் காலங்களில் மற்றும் வார இறுதி நாட்களில் தினமும் அதிகபட்சம் 8,000 வாகனங்கள், மற்ற நாட்களில் 6,000 வாகனங்கள் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. சீசன் அல்லாத நாட்களில், வாகன எண்ணிக்கைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
இருப்பினும், இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு, அங்கேயே ஆன்லைனில் விண்ணப்பிக்க வலியுறுத்தப்படுகின்றன. இதனால், பாஸ் முன்கூட்டியே பெற்றவர்களும், சாவடிகளில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் உருவாகி, கடும் நெரிசல் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள் கூறுகையில்,
சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் திட்டமிட்டு தான் ஊட்டிக்கு வருகிறார்கள். ஆகையால், குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே ‘இ-பாஸ்’ எடுப்பதை கட்டாயமாக்க வேண்டும். அதற்குப் பிந்தைய விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு அல்லது கூடுதல் கட்டணம் விதிக்கலாம். அப்போதுதான் அனைவரும் முன்கூட்டியே பாஸ் எடுத்து வருவார்கள்,” என தெரிவித்தனர். பசுமை வரி வசூல் பணியில் தாமதம் ஏற்படாமல் இருக்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் ஊட்டியில் வாகன நெரிசலை உண்மையில் குறைக்க முடியும்,” என்றும் வலியுறுத்தினர்.