மேகமலையில் பகல் நேரத்திலும் நீடிக்கும் கடும் உறைபனி  பனிமூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து

தேனி மாவட்டத்தின் ‘குட்டி மூணாறு’ என்று அழைக்கப்படும் மேகமலை மலைப்பகுதியில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வழக்கத்திற்கு மாறாகக் கடும் உறைபனி நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. பசுமையான தேயிலைத் தோட்டங்கள், மலைமுகடுகளைத் தொட்டுச் செல்லும் மேகக் கூட்டங்கள் மற்றும் மணலாறு நீர்த்தேக்கத்திற்கு நீர் அருந்த வரும் காட்டு யானைகள் எனச் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் சுண்டி இழுக்கும் மேகமலையில், தற்போது சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறியுள்ளது. கடந்த சில மாதங்களாகப் பெய்த சாரல் மழையைத் தொடர்ந்து, தற்போது நிலவி வரும் உறைபனியானது இரவு நேரங்களைத் தாண்டி பகல் முழுவதும் நீடிப்பதால், ஒட்டுமொத்த மலைப்பகுதியும் வெள்ளைப்போர்வை போர்த்தியது போலக் காட்சியளிக்கிறது.

இந்த அதீத பனிமூட்டம் காரணமாக, மலைப்பாதைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூடத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அதிகாலையில் வேலைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. பனியின் தாக்கம் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, எப்போதும் மக்கள் கூட்டத்தால் களைகட்டும் இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராசா மெட்டு மற்றும் தூவானம் அணைப் பகுதிகள் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கடுமையான குளிரின் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர். ஒருபுறம் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், மேகமலையில் உள்ள அணைகளில் சேகரமாகும் தண்ணீரைக் கொண்டு சுருளியாறு மின் நிலையத்தில் வழக்கம் போல மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இருப்பினும், கடும் குளிர் மற்றும் சாலைகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாக வாகனங்களை இயக்குவதில் சிக்கல் நீடிப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version