கரூரில் கடும் பனிப்பொழிவால் வாழை வரத்து குறைவு  விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் பிரதான சாகுபடியாக விளங்கும் வாழையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக புகழூர், வேலாயுதம்பாளையம், மாயனூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை மற்றும் குளித்தலை உள்ளிட்ட காவிரி வடிநிலப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, தேன்வாழை மற்றும் கற்பூரவள்ளி உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் தினந்தோறும் கரூர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்குக் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுவது வழக்கம்.

தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, வாழைக் காய்கள் முதிர்ச்சியடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் வாழைத்தார்களின் வரத்து கடந்த வாரத்தை விடக் குறைந்துள்ளது. வரத்து குறைவு மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன், மார்கழி மாத விசேஷங்கள் ஆகியவற்றின் காரணமாகத் தேவையானது அதிகரித்துள்ளது. இதன் நேரடி விளைவாக வாழைத்தார்களின் விலை ஏறுமுகமாக உள்ளது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான பூவன் வாழைத்தார், இந்த வாரம் 100 ரூபாய் உயர்ந்து 400 ரூபாய்க்கு ஏலம் போனது. அதேபோல், தேன்வாழை ரகமும் 300 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. ரஸ்தாளி ரகம் மட்டும் விலையில் மாற்றமின்றி தார் 400 ரூபாய் என நிலையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து காவிரி கரையோர விவசாயிகள் கூறுகையில், “பொதுவாகக் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் விசேஷங்கள் அதிகம் என்பதால் வாழை இலை, காய் மற்றும் பழங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். கடந்த சில மாதங்களாகக் போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு ஓரளவு கைக்கொடுத்துள்ளது. வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதால், கூடுதல் லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம்” என்றனர். வரத்து குறைவால் வியாபாரிகளிடையே நிலவும் கடும் போட்டியால், தரமான தார்கள் நல்ல விலைக்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version