மின்கட்டண உயர்வு மற்றும் கடும் தொழில் போட்டியால் நசியும் திண்டுக்கல் நூற்பாலைகள்  தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தமிழகத்தின் ஜவுளி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில், நூற்பாலைத் தொழில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, வத்தலகுண்டு மற்றும் பழநி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலை நம்பி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், வடமாநிலத் தொழிலாளர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர். கடந்த காலங்களில் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து பஞ்சுகளைக் கொள்முதல் செய்து, அவற்றை இங்கே நூலாகவும் ஆடையாகவும் மாற்றி சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். ஆனால், தற்போது பருத்தி விளையும் வடமாநிலங்களிலேயே அம்மாநில அரசுகளின் தாராளமான மானிய உதவிகளுடன் புதிய நூற்பாலைகள் அதிகளவில் உருவாகியுள்ளன. இதனால், அங்கிருந்து பஞ்சு வாங்கி வந்து இங்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, உற்பத்திச் செலவு (Production Cost) அதிகரிப்பதன் காரணமாக வடமாநில ஆலைகளுடன் தொழில் போட்டியைச் சமாளிக்க முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது.

இத்தகையச் சூழலில், தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.9.40 என மின்கட்டணத்தை உயர்த்தியது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்துள்ளது. கூடுதல் மின் கட்டணத்தால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நூற்பாலைகள் கட்டுப்படியாகாத நிலையில் தங்கள் செயல்பாடுகளை முடக்கியுள்ளன. இதன் விளைவாகப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, அமெரிக்க அரசு இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளை மட்டுமே நம்பி ஏற்றுமதியில் ஈடுபட்டு வந்த பெரிய ஆலைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பஞ்சு விலை உயர்வு, மின்கட்டணச் சுமை மற்றும் சர்வதேச வரி விதிப்பு என முப்பக்க நெருக்கடிகளில் சிக்கி விழிபிதுங்கி நிற்கும் இந்தத் தொழிலைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட வேண்டும். மின்கட்டணச் சலுகை, பருத்தி கொள்முதலுக்கான மானியம் மற்றும் ஏற்றுமதி வரிச் சலுகைகள் போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்காவிட்டால், திண்டுக்கல் மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் நூற்பாலைத் தொழில் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளதாகத் தொழில் அதிபர்களும் தொழிற்சங்கங்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version