அதிமுக கட்சி விதி திருத்தம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகளில், சென்னை மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்கள் முக்கிய உத்தரவுகளை இன்று பிறப்பித்துள்ளன.
அதிமுக கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் உட்கட்சித் தேர்தலை எதிர்த்து, ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி. பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோர் உரிமையியல் வழக்கு தொடர அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். தனி நீதிபதி வேல்முருகன், அவர்களுக்கு அனுமதி அளித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் அமர்வு, “சுரேன் மற்றும் ராம்குமார் ஆதித்தன் அதிமுக உறுப்பினர்கள் என்பதை உறுதியாக நிரூபிக்க முடியவில்லை” எனக் குறிப்பிட்டு, தனி நீதிபதி அளித்த அனுமதி உத்தரவை ரத்து செய்தனர்.
இதேவேளை, அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி, புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி அமீத் சர்மா அமர்வில் நடைபெற்ற விசாரணையில், “தேர்தல் ஆணையம் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் வருகிறது” என்று புகழேந்தி தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிமன்றம், தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி, வழக்கை 2026 ஜனவரி 23க்கு ஒத்திவைத்தது.