அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணிக்குள் பல்வேறு அரசியல் அலைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தார்.
முதலில் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனை அதிமுக எம்.பிக்களுடன் சேர்ந்து வாழ்த்திய ஈபிஎஸ், பின்னர் இரவு அமித் ஷாவின் இல்லத்துக்குச் சென்றார். கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பில், பிறகு சுமார் 20 நிமிடங்கள் அமித் ஷா மற்றும் ஈபிஎஸ் தனிப்பட்ட முறையில் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த உரையாடலில், பாஜக கூட்டணியிலிருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் சந்திக்க வேண்டாம் எனவும், அதேபோல கட்சிக்குள் அதிருப்தி தெரிவித்து வந்த செங்கோட்டையனையும் பாஜகத் தலைவர்கள் அணுக வேண்டாம் எனவும் ஈபிஎஸ் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், திமுக தலைவர்கள் மீது உள்ள அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ஈபிஎஸ் அமித் ஷாவிடம் முன்வைத்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
சமீபத்தில், அதிமுக இணைப்பு குறித்து ஈபிஎஸுக்கு கெடு விதித்த செங்கோட்டையன், டெல்லியில் அமித் ஷாவை நேரில் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில், ஈபிஎஸ் – அமித் ஷா சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் புதிய ஆர்வத்தை கிளப்பியுள்ளது.