இணையத்தில் பரவலாக வைரலாகியுள்ள “ஏங்க… கூமாப்பட்டிக்கு வாங்க!” என்ற ரீல்ஸ் வீடியோ பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டி என்ற பட்டதாரி இளைஞர், தண்ணீருக்குள் நின்றபடி தனது கிராமத்தை புகழ்ந்து பேசியுள்ளார். அவரது சொற்பொழிவுகள் பலரையும் ஈர்த்துள்ள நிலையில், கூமாப்பட்டி தற்போது ஒரு டிரெண்டிங் டெஸ்டினேஷனாக மாறியுள்ளது.
வீடியோவை நம்பி கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் கூமாப்பட்டியை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளது. இருப்பினும், சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை வைத்து மக்கள் ஏமாற்றம் அடையக் கூடாது எனவும், பினவக்கல் பெரியாறு அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சூழலில், விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் — தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையராக பணியாற்றி வருகிறார் — தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் கூமாப்பட்டி தொடர்பான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் பதிவிட்டதாவது :
நேற்றிலிருந்து நண்பர்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு, ‘விருதுநகர் கலெக்டராக இருந்த போது இப்படியொரு இன்டர்நேஷனல் எக்ஸாடிக் டெஸ்டினேஷனை எங்களிடம் காட்டாமலே விட்டுவிட்டீர்களே!’ எனக் கோபப்படுகிறார்கள்.
எனக்கே சிறிய அதிர்ச்சி தான்! நாளைய விடுமுறையில் நேரில் சென்று பார்த்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்தேன். கூமாப்பட்டி என்பது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த அழகான கிராமம்.
பிளவக்கல் கோவிலாறு அணைக்கு அருகிலுள்ள இந்த ஊரில், இரண்டு பெரிய கண்மாய்களும், ஆயக்கட்டுகளும் உள்ளன. மழைக்காலத்தில் கண்மாய்கள் நிரம்பி, கடல்போல் காட்சியளிக்கும். இயற்கை எழிலில் கூடிய இந்த ஊர், நகர்ப்புற வாழ்வின் அழுத்தத்திலிருந்து விடுபட கிராம சுற்றுலாவுக்கான சிறந்த இடமாக மாறும் முழுமையான வாய்ப்பு கொண்டது.
வைரலான அந்த வீடியோவில் காணப்படும் காதல் தோல்வி அல்லது வெற்றிக்கான ‘தைலம்’ பற்றிய விஷயங்கள் அனைத்தும், ரீல்ஸுக்காக உருவாக்கப்பட்ட கதைகளே தவிர, எந்தவொரு ஆவண ஆதாரமும் இல்லை.”
அத்துடன், கூமாப்பட்டி கண்மாயின் தற்போதைய புகைப்படங்களையும், கடந்த ஆண்டுக்கான நீர் நிரம்பிய காட்சிகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இவ்வாறு, சமூக வலைதளங்களில் ஒரு சாதாரண வீடியோ மூலம் கிராமம் ஒட்டுமொத்தமாக வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அந்த பகுதியின் இயற்கை அழகு, சுற்றுலா வாய்ப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வும் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.