மேட்டூர் அணை அடிவாரத்தில் அமைந்துள்ள பூங்காவில் தெருநாய்கள் அட்டகாசம் காரணமாக, கடந்த இரண்டு நாட்களில் 10 சுற்றுலா பயணிகள் நாய்க்கடிக்கு உள்ளாகி காயமடைந்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளிடம் பெரும் அச்சம் நிலவுகிறது.
சேலம் மாவட்டத்துடன், தமிழகம் முழுவதும் மற்றும் கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் பலர் மேட்டூர் அணை பூங்காவை பார்வையிட வருகின்றனர். தொடர்ச்சியான அரசு விடுமுறையை முன்னிட்டு, கடந்த மூன்று நாட்களாக அதிகளவில் மக்கள் பூங்காவிற்கு திரண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளில் நான்கு பேரை ஒரு தெருநாய் கடித்து காயப்படுத்தியது. காயமடைந்தவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
அதேபோல், நேற்று ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த குடும்பம் அணை பூங்காவை பார்வையிட்டது. அப்போது அந்தக் குடும்பத்தில் 12 வயது சிறுவனை தெருநாய் கடித்து காயப்படுத்தியது. தொடர்ந்து நேற்று மதியம் மற்றொரு தெருநாய், 3 பெண்கள் உள்பட 5 பேரை தாக்கியது. அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பூங்காவில் சுற்றித்திரியும் தெருநாய்கள் திடீரென பயணிகளை விரட்டுவதும் கடிப்பதும் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், தெருநாய்களை பிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு மேற்கொள்ளப்படும் என்றும் மேட்டூர் நகராட்சி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
















