பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி ஆகிய உயர்கல்விப் படிப்புகளுக்கு நீட் (NEET) தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்துள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் நடத்துவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும்போது, மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கல்வித் தரத்தையும் அரசியலாக்கி விளையாட வேண்டாம் என அவர் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். மருத்துவத் துறையில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும் நோக்கில் மத்திய அரசு எடுக்கும் சீர்திருத்தங்களை முட்டுக்கட்டை போட்டுத் தடுப்பது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வரும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி (BPT) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (BOT) ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஸ்டாலின், “துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் வரும் என நாங்கள் எச்சரித்தது உண்மையாகிவிட்டது” எனக் கவலை தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த வானதி சீனிவாசன், “ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை அரசியலாக்கி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேவையற்ற அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதையே திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், யதார்த்தத்தில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பெரும் சாதனை படைத்து வருவதோடு, சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களும் அரசுப் பள்ளி மாணவர்களும் எம்பிபிஎஸ் படிப்பில் தடையின்றிச் சேர்ந்து வருகின்றனர்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிசியோதெரபி படிப்பு குறித்து முதல்வர் தவறான புரிதலைக் கொண்டுள்ளதாகச் சாடியுள்ள வானதி சீனிவாசன், “பிசியோதெரபி என்பது வெறும் ‘துணை மருத்துவப் படிப்பு’ அல்ல; அது ‘அலைடு ஹெல்த்ஹேர் புரபஷனல்’ (Allied and Healthcare Professional) பட்டப்படிப்பு என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தப் படிப்பின் கால அளவு நான்கரை ஆண்டிலிருந்து 5 ஆண்டாக உயர்த்தப்பட்டு, நீட் தேர்வுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பிசியோதெரபி படிப்புக்கு சர்வதேச அளவில் பெரும் மதிப்பும், மருத்துவ அந்தஸ்தும் கிடைக்கும் என்பதால், பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கமே இதனை வரவேற்று மத்திய அரசுக்குத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். அவர்களது நீண்டநாள் கோரிக்கையை ஏற்றுதான் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளார்.
எதிர்காலத்தில் அனைத்து மருத்துவப் படிப்புகளும் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்றும், அதற்கு முதல்வரின் இத்தகைய கடிதங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பிசியோதெரபி படிப்பினை வெறும் துணை மருத்துவப் படிப்பு எனத் தாழ்த்திப் பேசுவது அந்தத் துறையில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைக்கும் செயல் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, அரசியல் லாபத்திற்காகக் கல்வியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல், மாணவர்களின் கல்வித் தரம் உயரத் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
