ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூக்கநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்தில், திமுகவின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணையும் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட ஓட்டர்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், அந்தப் பகுதி திமுக நிர்வாகி மாணிக்கம் அவர்களின் சீரிய ஏற்பாட்டில், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, கழகத்தின் கொள்கைகளை ஏற்று இணைந்த இவர்களுக்கு, மாவட்டச் செயலாளர் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றதோடு, புதிய உறுப்பினர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான நாள்காட்டிகளையும் வழங்கினார்.
தூக்கநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜம்பு (எ) கே.கே. சண்முகம், பெரிய கொடிவேரி பேரூர் கழகச் செயலாளர் ஆறுமுகம் மற்றும் பேரூராட்சித் தலைவர் தமிழ் மகன் சிவா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில், மாவட்டச் செயலாளர் என். நல்லசிவம் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், “வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் மிக முக்கியமானது. கோபிசெட்டிபாளையம் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ, அவரின் வெற்றிக்காக நாம் இப்போதிலிருந்தே களப்பணியைத் தொடங்க வேண்டும். இரவு பகல் பாராது உழைத்து, இந்தத் தொகுதியில் திமுகவின் வெற்றிக்கனியைப் பறித்து முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று சூளுரைத்தார்.
இந்த விழாவில் கிளைத் தலைவர் முருகேஷ், செயலாளர் நடராஜ், பிஎல்ஏ 2 பொறுப்பாளர் சதாசிவம், பிஎல்சி சமுத்திரம், குமார் உள்ளிட்ட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கோபிசெட்டிபாளையம் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் நிலையில், தற்போது 100-க்கும் மேற்பட்டோர் ஆளுங்கட்சியில் இணைந்திருப்பது அப்பகுதி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், அடிமட்ட அளவில் கட்சியின் செல்வாக்கை உயர்த்த இத்தகைய சேர்க்கை நிகழ்வுகள் உதவும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். திரளாகக் கூடி இருந்த புதிய உறுப்பினர்கள், திமுகவின் வெற்றிக்குத் தங்களால் இயன்ற முழுப் பங்களிப்பை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

















