மாம்பழம் விற்பதைப் போல கூவி கூவி உறுப்பினர்களை சேர்க்கும் திமுக : அண்ணாமலை கிண்டல்

“மாம்பழம் விற்பதைப் போல, கூவி கூவி உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்” என தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.

திருப்பூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டனர். அப்போது, அண்மையில் திருவள்ளூரில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, “இந்த சம்பவம் மிகவும் துயரமானது. கடந்த 7 நாட்களாக குற்றவாளியை கைது செய்யாத போலீசாரின் செயல்பாடு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கான மறுக்க முடியாத சாட்சி” என்றார்.

முதல்வர் எம்கே ஸ்டாலின் இதுவரை இதுகுறித்து பதிலளிக்கவில்லை என்றும், “அவர் சாரி சொல்லத்தான் தெரியும்” என கடுமையாக விமர்சித்தார்.

திமுகவில் வலுக்கட்டாய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கூறிய அண்ணாமலை, “தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்பதற்காகவே உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது வெட்கக்கேடாகும். மாம்பழம் விற்பதைப் போல கூவி கூவி உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு ஆட்சி நடத்திய கட்சிக்கு தகாத செயல்” என தெரிவித்தார்.

மேலும், “திமுக 5 முறை ஆட்சி நடத்தி, 6-வது முறையாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் தாக்கம் இன்றி, மக்கள் மீது வலுக்கட்டாயம் செய்தே செயல்படுகிறார்கள். தே.ஜ.க. கூட்டணியே இந்த முறை வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

கஞ்சா புழக்கம் குறித்து எச்சரிக்கை

திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாகவும், கல்லூரி மாணவர்கள் அதனால் சண்டை போடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கவலை தெரிவித்தார். “நடுத்தர குடும்பத்து பெற்றோர் தங்களது பிள்ளைகளை வெளியே அனுப்பவும் பயப்படுகின்றனர். இது மிகவும் கவலைக்கிடமான நிலை” எனவும் கூறினார்.

அவருடன் வந்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும், “திருவள்ளூர் சிறுமி வழக்கில், முதல்வர் சாரி மட்டும் சொல்வதில்தான் முடிவடைகிறார்” என கூர்ந்த விமர்சனம் எழுப்பினார்.

Exit mobile version