“பாஜக வாஷிங் மெஷினில் விழ திமுகவினர் கோழைகள் அல்ல” – ஆர். எஸ். பாரதி

சென்னை:
அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“2006–2011 திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி மீது, பழிவாங்கும் நோக்கில் அடுத்த அதிமுக ஆட்சி வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் 2012-ஆம் ஆண்டு திண்டுக்கல் நீதிமன்றம் விடுதலை அளித்தது. ஆனால், அதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தான் இப்போது அமலாக்கத்துறை சோதனைகள் நடக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அப்போது தலையிடாத ED, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரமாக செயல்படுவது அரசியல் பழிவாங்கல்தான் என்பதைக் கூட எட்டாம் வகுப்பு மாணவரும் புரிந்துகொள்வார். பெரியசாமி ED விசாரணைக்கு ஏற்கனவே ஒத்துழைத்திருந்தும், இன்றைய திடீர் சோதனை சந்தேகத்தை எழுப்புகிறது,” எனக் கூறியுள்ளார்.

மேலும், ஆளுநர் ஆர். என். ரவி சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, அதற்கு திமுக மறுப்பு தெரிவித்த நிலையில் தான் இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

“பாஜக வாஷிங் மெஷினில் விழுவதற்கு நாங்கள் தவறு செய்தவர்கள் அல்ல. பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவற்றை நீதிமன்றத்தில் நிரூபித்து விடுபடுவோம். வழக்குகளை வாபஸ் பெற பாஜக வாஷிங் மெஷினில் கழுவிக் கொள்ள திமுகவினர் கோழைகள் அல்ல. திமுக சுயமரியாதை பாதையில் வந்தவர்கள், அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள்,” என்று பாரதி தெரிவித்தார்.

அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் ED 5,300 வழக்குகள் பதிவு செய்தும், வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்க, அவர்களை நோக்கி ED நடவடிக்கை எடுக்காத நிலையில், திமுக அமைச்சர்கள் வீடுகளில் மீண்டும் மீண்டும் சோதனை நடத்தி குற்றத் தோற்றத்தை உருவாக்குவதே ஒன்றிய அரசின் குறிக்கோள் என பாரதி தாக்குதல் நடத்தினார்.

“தமிழ்நாட்டில் மக்கள் திமுகவுடன் உறுதியாக நிற்கின்றனர். அதனால் பாஜகவும் அதன் அடிமைகளும் எவ்வளவு சோதனைகள் நடத்தியாலும் அச்சுறுத்த முடியாது,” என ஆர். எஸ். பாரதி வலியுறுத்தினார்.

Exit mobile version