“பொதுவெளியில் பேசும் போது, மூத்த தி.மு.க. தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்,” எனப் பெருந்தலைவர் காமராஜரின் கொள்ளுப்பேரனும், இறுதிச் சடங்கை செய்த பேரனின் மகனுமான காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சமீபத்தில் பெரம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, “காமராஜர் ஏ.சி. இல்லாதால் உடலில் அலர்ஜி வந்துவிடும் எனக் கூறி, பயணியர் விடுதிகளில் ஏ.சி. வசதியை ஏற்படுத்துமாறு கருணாநிதி உத்தரவிட்டார்” என பேசியிருந்தார். மேலும், “உயிர்நிலையில் கருணாநிதியின் கையைப் பிடித்து, ‘நீங்கள்தான் நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்’ என காமராஜர் கூறினார்” என்றும் தெரிவித்திருந்தார்.
இவ்வுரை பலரிடையே அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இதையடுத்து, காமராஜரின் பேரன் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
“திருச்சி சிவா போன்ற மூத்த அரசியல்வாதிகள், மறைந்த தலைவர்களைப் பற்றிப் பேசும் போது சரியான தகவல்களை மட்டுமே சொல்ல வேண்டும். காமராஜர் ஏசி வசதியில் வாழ்ந்தார் எனச் சொல்வது தவறானத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர் எளிமையின் உன்னத அடையாளம். ரேஷன் அரிசி சாப்பிட்டவர். வாடகை வீட்டில் வசித்தவர். மக்களின் பணத்தை வீணடிக்காதவர்.”
அவர் தொடர்ந்தும் கூறியதாவது :
“திருமலைப்பிள்ளை சாலை வீடில் கீழே ஏசி இருந்தாலும், பெரும்பாலும் மேல் மாடியில் படுக்கை அறையைத்தான் பயன்படுத்தினார். அவரது உடல்நிலை காரணமாக 72வது வயதில் ஏசி பயன்படுத்தி இருந்தால் கூட, அதைக் கேலி செய்தது போன்று பேசியிருப்பது தவறாகும்.”
அதேபோல, “கருணாநிதி கையைப் பிடித்து ‘நீங்கள்தான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னதாக திருச்சி சிவா கூறியது, உண்மையா என்பது தெரியாது. அந்த நேரத்தில் இருவரும் மட்டுமே இருந்தனர். அவர்களின் தனிப்பட்ட உரையாடலை இப்போது திருச்சி சிவா சொல்லுவது தகுந்ததல்ல,” என்றார்.
“திமுக அரசு, காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது போன்று, அவரிடம் மரியாதை இருந்தது உண்மைதான். ஆனால், அவரது பெயரை வைத்து தவறான விளக்கங்களை தருவது வருந்தத்தக்கது,” என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
கடைசியாக, “சில திமுக அமைச்சர்கள் எப்போது, எங்கு, என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசுகிறார்கள். இது வருத்தமளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களே இதை கவனிக்க வேண்டும். நாவடக்கம் முக்கியம்,” எனக் கூறிய காமராஜ், பிரச்னையை விரிவுபடுத்த வேண்டாம் என்றும், வயது முதிர்வால் திருச்சி சிவா வாய் தவறி பேசியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.