“திமுக அரசின் செயல் மன்னிக்க முடியாதது” – ஸ்டாலின் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக நடந்தது திமுக அரசின் மன்னிக்க முடியாத தவறாகும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“தமிழகத்தின் ஜீவநதி காவிரி. இதன் நீரையே நம்பி டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் சுமார் 20 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் காவிரிதான் பூர்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது என்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கும் செய்தியாகும்.

தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியாக கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்காமல், சுப்ரீம் கோர்ட்டில் திமுக அரசு வலுவான வாதம் முன்வைக்காததால் தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இதற்குப் பொறுப்பு முதல்வர் மு.க. ஸ்டாலின்மீதே உள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:
“மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும் என்பது ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது. 2024 பிப்ரவரி 1 அன்று டில்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டத்தில் கூட, கர்நாடகம் இந்த விஷயத்தை முன்வைத்தபோது திமுக அரசு மௌனமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள தங்களது குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த திமுக அரசின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும். தமிழகத்தின் நீர்வழி உரிமையை மீட்க திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version