திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள பழமை வாய்ந்த தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், அதனை நிறைவேற்றத் தி.மு.க. அரசு மறுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்கள் முரண்பாடாக உள்ளதாகச் சாடிய அவர், “மலை மேல் இருப்பது ஒரு பக்கம் சமணர் தூண் என்றும், மறுபுறம் அது வெறும் ‘சர்வே கல்’ (நில அளவைக் கல்) என்றும் அரசு கூறி வருகிறது. இவர்களை இப்படியே விட்டால், நாளை அதனைச் சலவைக் கல் என்று கூடச் சொல்லத் தயங்க மாட்டார்கள்” என்று எள்ளி நகையாடினார்.
உலகில் எந்த நாட்டிலாவது 15 அடி உயரத்தில் ‘சர்வே கல்’ வைக்கப்பட்டிருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பிய உதயகுமார், ஆன்மிக மரபுகளைச் சிதைக்கும் நோக்கில் அரசு செயல்படுவதாகத் தெரிவித்தார். மேலும், தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள மசோதாவில் தி.மு.க. மற்றும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதைக் குறிப்பிட்டு, இது நீதித்துறையை நேரடியாக அச்சுறுத்தும் செயல் என்று சாடினார். “தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரவில்லை என்பதற்காக ஒரு நீதிபதியை மிரட்டும் வகையில் மசோதா கொண்டு வருவது ஜனநாயகத்தின் நான்காவது தூணைத் தகர்க்கும் செயலாகும். தமிழக அரசியல் வரலாற்றில் நீதித்துறையை அச்சுறுத்தும் இத்தகைய ஒரு மோசமான நிலையைத் தமிழகம் இதுவரை சந்தித்ததில்லை” என்று அவர் வேதனை தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதிக்காமல், ஒரு தரப்புக்கு ஆதரவாக அரசு செயல்படுவதால் ஒரு முருக பக்தர் தீக்குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட உதயகுமார், இது தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது என்றார். அரசு உடனடியாக நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கைவிட்டு ஆன்மிக மரபுகளைக் காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அ.தி.மு.க. என்றும் பக்தர்களின் உணர்வுகளுக்குத் துணை நிற்கும் என்றும், இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை ஓயாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
