தி.மு.க. நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரம் : சீமான் உள்ளிட்ட 16 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

விருத்தாசலம் : தி.மு.க. நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 16 பேர் மீது நான்கு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (44), பெட்ரோல் பங்க் உரிமையாளராக உள்ளார். இவர், தி.மு.க. கிழக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த டிசம்பர் 14ஆம் தேதி மாலை 7.15 மணியளவில், விருத்தாசலத்தில் நடைபெற்ற அரசு பணியாளர் சங்க மாநாட்டில் பங்கேற்ற நா.த.க. தலைவர் சீமான் சென்ற காரை மறித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நா.த.க. தொண்டர்கள் தன்னை தாக்கியதாக ரங்கநாதன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில், சீமான் உள்ளிட்ட 16 பேர் மீது விருத்தாசலம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் அளித்த எதிர்ப்புகாரின் அடிப்படையில், ரங்கநாதன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version