தமிழ்நாட்டில் உள்ள பூத் கமிட்டிகளை அமைத்து, ஆளும் கட்சிக்கும் ஆளும் கூட்டணிக் கட்சிக்கும் சிம்ம சொப்பணமாக விளங்கும் வகையில் ஒரே ஒரு தேமுதிக மட்டுமே இருக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் பேசியுள்ளார். மதுரை கூடல் நகரில், தேமுதிக சார்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, தேமுதிகவின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பின்வருமாறு உரையாற்றினார்:
மதுரையில் தொடங்கியுள்ள தேமுதிகவின் 3-வது கட்ட பயணம், திருச்சி வரை நடைபெறும். 4-வது கட்டப் பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி விருதுநகர் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடலூரில் ஜனநாயகம் தழைக்கும் வகையில் பூத் கமிட்டி மற்றும் மக்கள் மன்ற உறுப்பினர்கள் பணியைத் துவங்க உள்ளோம். இந்த உலகமே திரும்பிப் பார்க்கக்கூடியதாக இருக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்து, ஆளும் கட்சிக்கும், ஆளும் கூட்டணிக் கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரே ஒரு தேமுதிக மட்டுமே இருக்கும். மதுரையில் 2005-ஆம் ஆண்டு நடந்த தேமுதிக மாநாடு தான், உலகிலேயே நம்பர் 1 மாநாடு ஆகும்.”மேலே உள்ளவர்கள் கீழே வந்தால்தான் ஆக வேண்டும். கீழே உள்ளவர்களும் மேலே செல்லும் காலம் வரும்” என்று சமூக நீதி சார்ந்த கருத்தை வலியுறுத்தினார்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் மகுடம் சூடத் திட்டமிட்டுள்ள தேமுதிக, அதற்கான வியூகங்களை இப்போதே வகுத்து வருகிறது.”2026 தேர்தலில் மக்கள் நலன் கூட்டணியில் வெற்றி பெறுவோம். சட்டமன்றத் தேர்தலுக்கு 3 மாதங்களுக்குள் வரும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். என்ன அடுத்து முதல்வர், நானா பிரதம மந்திரியா என தொண்டர்கள் அழைக்கின்றனர். யாருக்கு என்ன வேண்டுமென்றாலும் கட்சியின் அங்கீகாரத்துடன் அனைவரும் கூடி கலந்தாலோசனை செய்தபின் முடிவெடுக்கப்படும். கடலூர் 2.0 மாநாட்டிற்கு கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது,” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டத்தில், மண்டல பொறுப்பாளர் பன்னீர் செல்வம், மாவட்ட அனைத்து தலைவர் ராமர், பொருளாளர் சரவணன், துணை செயலாளர் மாணிக்க வாசகம், பெத்தானியபுரம் பகுதி செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

















