தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணி, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக உருவாக்கும் கூட்டணி மிகப்பெரியதும், தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் பக்கபலத்தையும் வழங்கும் கூட்டணியாக இருக்கும். எங்கள் கட்சி அங்கீகரிக்கப்பட்டது என்பதால், ‘முரசு’ சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடப் போகிறோம்,” என்றார்.
மேலும், தற்போதைய சமூகச் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கையில், “போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததால் சமூக விரோத செயல்கள் பெருகி வருகின்றன. இதை கட்டுப்படுத்த அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் கூறினார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும்போது, “பெண்கள் இரவு நேரங்களில் அல்லது தனியாக அலைவதை தவிர்க்க வேண்டும்,” எனவும், வடஇந்தியர்கள் வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வரலாம் என்றாலும், “அவர்களுக்கு இங்கு வாக்குரிமை வழங்கப்படுவதை தேமுதிக ஏற்காது,” எனவும் அவர் தெரிவித்தார்.
வரவிருக்கும் கட்சி மாநாடு குறித்து அவர் கூறுகையில், “தேமுதிக மாநாடு ஜனவரி மாதத்தில் நடைபெறும். அதற்கு முன்னதாகவே கூட்டணி முடிவுகள் வந்தால் பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் அறிவிப்போம்; இல்லையெனில் மாநாட்டிலேயே அறிவிக்கப்படும். எப்படியாயினும், தேமுதிக இருக்கும் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
