ரயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 78 நாட்கள் சம்பளத்திற்கு இணையான தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
அக். 2ஆம் தேதி தசரா, அக். 20ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், ஊழியர்களுக்கு பண்டிகை முன்னிட்டு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் நேரடியாக பயனடைய உள்ளனர். இதில் தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேலாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். மொத்த செலவினமாக ரூ.1,865 கோடி அரசு ஏற்க இருக்கிறது.
இதே கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:
கப்பல் கட்டுமானத் துறை மேம்பாடு – ரூ.69,725 கோடி மதிப்பிலான திட்டம்.
பீஹார் ரயில் திட்டம் – பக்தியார்பூர் – ராஜ்கிர் – தலையா பாதையை இரட்டைப்படுத்துதல்.
பீஹார் சாலை திட்டம் – சாகேப்கஞ்ச்-அரேராஜ்-பேட்டியா இடையே 78.942 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலைக்கு ரூ.3,822.31 கோடி ஒதுக்கீடு.
CSIR திறன் மேம்பாட்டு திட்டம் – 2021-22 முதல் 2025-26 வரை ரூ.2,277 கோடி.
மருத்துவ கல்வி விரிவாக்கம் – அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,023 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 5,000 மேற்படிப்பு (MD/MS) இடங்களை அதிகரிக்கும் திட்டம்.
இந்த அறிவிப்புகள், பண்டிகை காலத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தருவதோடு, பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
