வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மாநில அமைச்சர் துரைமுருகன் வரும் 15ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007 முதல் 2009 வரை பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த காலத்தில், ரூ.1.40 கோடி மதிப்பிலான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக துரைமுருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு வேலூர் நீதிமன்றம் துரைமுருகனை விடுவித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், சென்னை உயர்நீதிமன்றம் வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது.
இதன் பேரில், வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜரான சாந்தகுமாரி, பிடிவாரண்ட்டை திரும்ப பெற மனு அளித்தார். அதை நீதிமன்றம் ஏற்று, அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்தது.
இதே வழக்கில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.