இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம் ; ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் களத்தில்

வரவிருக்கும் 2025 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ஹாங்காங் சிக்ஸஸ் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கார்த்திக்கின் சர்வதேச அனுபவம் மற்றும் தலைமைத்துவ திறன்கள் இந்திய அணிக்கு முக்கிய ஆதரவாக இருக்கும் என்றும், அவரது அதிரடி பேட்டிங் போட்டிக்கு ஆற்றல் சேர்க்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோடு, இந்திய அணியில் கார்த்திக்கின் நெருங்கிய நண்பரும் முன்னாள் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் பங்கேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், பொதுவாக 11 வீரர்களுக்குப் பதிலாக 6 வீரர்கள் மற்றும் ஒவ்வொரு போட்டியிலும் 6 ஓவர்கள் கொண்ட அணிகள் மட்டுமே களமிறங்குகின்றன. கடந்த ஆண்டு நடந்த ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், உத்தப்பா தலைமையிலான இந்திய அணி இரண்டு லீக் போட்டியிலும் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. அதே நேரத்தில், பாகிஸ்தானை எதிர்த்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பை வென்றது இலங்கை அணி.

2025 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் போட்டிகள் நவம்பர் 7 முதல் 9 வரையிலான காலக்கட்டத்தில் டின் குவாங் சாலை பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெறும். இந்திய அணிக்கு இதுவரை ஒரே முறையே இந்த தொடரில் கோப்பை வென்ற அனுபவம் உள்ளது. இம்முறை, தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய அணியின் வெற்றியுக்கான எதிர்பார்ப்பு பெரிதாக உள்ளது.

Exit mobile version