பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம்: திண்டுக்கல் விஏஓ கையும் களவுமாக கைது

பட்டா மாறுதல் செய்வதற்கு லஞ்சம் பெற்ற ஆத்தூர் தாலுகாவைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) ஒருவரை, லஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று (டிசம்பர் 6) கையும் களவுமாக கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவருக்குக் கன்னிவாடி அருகே சுமார் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கான பட்டா மாறுதல் செய்வதற்கு இளையராஜா, ஆத்தூர் தாலுகாவில் உள்ள மணலூர் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) முருகனை அணுகியுள்ளார்.

அப்போது, விஏஓ முருகன், பட்டா மாறுதல் செய்து கொடுப்பதற்கு இளையராஜாவிடம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளையராஜா, உடனடியாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புப் போலீசார் அளித்த ஆலோசனையின்படி, இளையராஜா விஏஓ அலுவலகத்தில் வைத்து, விஏஓ முருகனிடம் ரூ.10,000 லஞ்சப் பணத்தைக் கொடுத்தார்.

அந்த நேரத்தில், அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார், விஏஓ முருகனை கையும் களவுமாகக் கைது செய்தனர். விஏஓ முருகன் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாகப் பணிகளில் லஞ்சம் தலைதூக்குவது குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்தச் செயல்பாடு வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version