டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் தங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். ஆனால், சமீபத்தில் வெளியான அறிவிப்புகள் ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.
அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இடைக்கால ஊதிய உயர்வாக ரூ.5,000 கோரப்பட்ட நிலையில், தற்போது வெறும் ரூ.1,000 மட்டுமே உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஊழியர்கள், “பணி நிரந்தரம், ஓய்வூதியம் மற்றும் காலமுறை ஊதியம் தொடர்பாக மேலாண்மை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். ஆனால், தற்போது வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் ‘குழு’ என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. இது எங்களை வஞ்சிக்கும் செயல்” என்று குற்றம் சாட்டியுள்ளனர். அமைச்சரின் உறுதிமொழி முழுமையாகச் செயல்படுத்தப்படாததைக் கண்டித்து, இன்று முதல் சென்னை டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் அருகே மீண்டும் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும், காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தாமல், அதற்கென மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அரசு ஒப்புக்கொண்டபடி மாற்று அறிக்கையை வெளியிடும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். இந்தத் திடீர் போராட்ட அறிவிப்பால் தமிழகம் முழுவதும் மது விற்பனை மற்றும் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து அரசு தரப்பில் எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
















