“மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் உயிரிழப்பதற்கு முன், திமுக தலைவர் கருணாநிதியின் கையை பிடித்து, ‘நீங்கள்தான் நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறியதாக” திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை பெரம்பூரில் நேற்று (ஜூலை 15) நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, காமராஜரின் பிறந்த நாளையொட்டி உரையாற்றினார். அதில், திமுக தலைவர் கருணாநிதியுடன் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது :
“என் 23, 24 வயதில் கருணாநிதி என்னை காரில் அழைத்து செல்வார். அந்த வேளையில், பல வரலாற்று நிகழ்வுகளை சொல்லிக் கொடுப்பார். ஒருமுறை, தமிழகம் முழுவதும் மின்தடை விவகாரத்தில் காமராஜர் கண்டன கூட்டங்கள் நடத்தியபோது, காமராஜருக்கு ஏசி வசதி இல்லையெனில் உடலில் அலர்ஜி ஏற்படும் என்பதை உணர்ந்த கருணாநிதி, பயணியர் விடுதிகளில் ஏசி வசதி செய்ய உத்தரவிட்டதாக கூறினார்.”
“அதுபோல், எமர்ஜென்சி காலத்தில் காமராஜரை கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டபோது, திருப்பதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தியதையும் கருணாநிதி பகிர்ந்ததாகவும் தெரிவித்தார்.”
“அப்போது, ‘நான் காங்கிரஸ்காரன். என்னை நிறுத்த இவர்க்கு என்ன அதிகாரம்?’ எனக் கேட்ட காமராஜரிடம், ‘நான் திமுக தலைவர் அல்ல. தமிழக முதல்வர். உங்களை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது’ என்று கருணாநிதி பதிலளித்ததாகவும், அதை முடிவில் புரிந்துகொண்ட காமராஜர், கருணாநிதியின் கையை பிடித்து, ‘நீங்கள்தான் நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்’ எனச் சொன்னதாகவும்” திருச்சி சிவா கூறினார்.
இந்தப் பேச்சு, இரண்டு தலைவர்களும் இப்போது இல்லாத சூழலில், பல ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு தகவலை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, “காமராஜர், ‘வைரவா அந்த விளக்கை அணை’ என்று கூறியபின் அவர் உயிரிழந்தார்” என்பது தான் பரவலாக அறியப்பட்ட நிகழ்வாகும். ஆனால், தற்போது திருச்சி சிவா கூறும் விவரம் அதற்கு முரணாக இருப்பதால், அது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட காங்கிரஸை சேர்ந்த வேலுச்சாமி கண்டனம் தெரிவித்தார். மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “காமராஜரை எருமை மாடு என திட்டியவர் கருணாநிதிதான்” என்று கடுமையாக விமர்சித்தார்.