அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்ற காரணத்தால், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, தினகரனின் அமமுகவும், ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவும் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. ஆனால், அந்த கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். அதேபோல் தேனி தொகுதியில் போட்டியிட்ட தினகரன் 2,78,825 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் முடித்தார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவை எதிர்கொள்வதற்காக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ளது. எனினும் எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையால் அதிருப்தியடைந்த ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் கூட்டணியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து தற்போது தினகரனும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான அமமுகவின் நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிசாமியின் அகங்கார ஆணவம் முறியடிக்கப்படும்” எனக் கூறினார்.
இதனால், ஓ.பன்னீர்செல்வம் – தினகரன் – செங்கோட்டையன் மூவரும் தனி அணியாக செயல்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், கோபிச்செட்டிபாளையம் அருகே நடந்த திருமண மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம், தினகரனின் விலகல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அது அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைவது பற்றியும் எனக்குத் தகவல் இல்லை. மேலும் அனைத்து கேள்விகளுக்கும் நாளை பதில் அளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.