மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புகழ்பெற்ற தர்ம சாஸ்தா ஆலயத்தின் 53-வது ஆண்டு உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜை பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் இந்த உற்சவ விழாவில், இந்த ஆண்டு 53-வது ஆண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, நாடு செழிக்கவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி நடத்தப்பட்ட 1008 திருவிளக்கு பூஜையில், அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு நெய் விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தனர். மங்கல இசை முழங்க நடைபெற்ற இந்த பூஜையினால் அந்தப் பகுதியே ஆன்மிகக் களையாகக் காட்சியளித்தது.
பூஜையைத் தொடர்ந்து, விழாவிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று இரவு அலங்கார மின் ஒளி சப்பரத்தில் தர்ம சாஸ்தா எழுந்தருளி நகர்வலம் வரவுள்ளார். வானவேடிக்கை முழங்க, மேளதாளங்களுடன் நடைபெறும் இந்த வீதியுலாவில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். இந்த ஆண்டு உற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகி ஏ.எல். சீனிவாசன், ஐயப்ப முருக பக்தர்கள் மற்றும் விழா குழுவினர் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். விழா நடைபெறும் பகுதிகளில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
