முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை ஐயப்ப சீசன் மற்றும் மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில் சீசன் என்பதால், மாலை அணிந்த பக்தர்களின் வருகை வழக்கத்தை விடப் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் வரும் பக்தர்கள், மருதமலை அடிவாரத்தில் உள்ள பேருந்து நிலையத்தையே பிரதானமாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்தப் பேருந்து நிலையமானது முறையான பராமரிப்பின்றி குப்பைக் கூடாரமாகக் காட்சியளிப்பது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்தப் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள், உணவுக் கழிவுகள் மற்றும் காகிதங்கள் அகற்றப்படாமல் ஆங்காங்கே குவியல் குவியலாகக் கிடக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஆன்மீகப் பயணிகள் வந்து செல்லும் ஒரு புனிதத் தலத்தின் நுழைவாயில் இத்தகைய சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவது பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது. குப்பைகள் அழுகித் துர்நாற்றம் வீசுவதால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். “ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு மன அமைதி தேடி வரும் இடத்தில், இத்தகைய அசுத்தமான சூழல் நிலவுவது வேதனையளிக்கிறது” என வெளிமாவட்டப் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும் சூழலில், துப்புரவுப் பணிகளை முடுக்கிவிட வேண்டிய சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், தொடர்ந்து மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு, பேருந்து நிலையத்தை நாள்தோறும் முறையாகச் சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, கோயில் அடிவாரப் பகுதியைத் தூய்மையாகப் பராமரிக்கத் தேவையான கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனப் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
