பிகாரின் முன்னேற்றம் என்டிஏ கூட்டணியால் மட்டுமே சாத்தியம் என்று மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி, முக்கிய கூட்டணிகள் வாக்காளர்களை கவரும் வகையில் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் இணைந்த மகாகத்பந்தனும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், பிகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்ட வீடியோவில், “நான் ஆட்சிக்கு வந்தபோது பிகாரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கடுமையாக உழைத்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை கொண்டு வந்தோம்,” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “ஒருகாலத்தில் ‘பிகாரி’ என்பது அவதூறு சொல்லாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று அந்த மாநிலம் கல்வி, சாலை, பெண்கள் நலன் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த மாற்றத்திற்குக் காரணம் நீண்டகால வளர்ச்சி திட்டங்கள்தான்,” என்றார்.
பிகாரில் வளர்ச்சியைத் தடை இன்றி தொடரச் செய்ய, மத்தியிலும் மாநிலத்திலும் என்டிஏ ஆட்சி அவசியம் எனவும், “என்டிஏ கூட்டணியால் மட்டுமே பிகாரில் நிலையான வளர்ச்சி சாத்தியம்,” என நிதிஷ்குமார் வலியுறுத்தினார்.


















