கோவையில் சர்வதேச தரத்தில் புதிய ஹாக்கி மைதானம்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

கோவை மாநகரின் விளையாட்டுப் பரப்பளவில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஆர்.எஸ்.புரம் பகுதியில் சர்வதேச தரத்திலான செயற்கை இழை (AstroTurf) ஹாக்கி மைதானம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை, வரும் 30-ஆம் தேதி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முறைப்படி திறந்து வைக்கிறார். இந்த மைதானம் அமைக்கப்பட்டதன் மூலம், கோவையில் சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள 72-வது வார்டு பகுதியில் இந்த மைதானத்திற்கான பணிகள் முன்னதாகத் தொடங்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் இடையில் முடங்கிப் போயிருந்தது. பின்னர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) ஆலோசனையின் பேரில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் வேகமெடுத்தன. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், வெறும் எட்டு மாத காலத்திற்குள் அனைத்துப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் முடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் ‘சர்வதேச ஹாக்கி பெடரேஷன்’ (FIH) குழுவினர் இந்த மைதானத்தை நேரில் ஆய்வு செய்து, சர்வதேச தரத்திலான போட்டிகளை நடத்த இது தகுதியானது என அதிகாரப்பூர்வச் சான்றிதழை வழங்கியுள்ளனர்.

திறப்பு விழாவை முன்னிட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மைதானத்தைத் திறந்து வைப்பதோடு மட்டுமல்லாமல், சிறிது நேரம் ஹாக்கி விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில், சுமார் 10,000 பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கவுள்ளார். இதற்காக மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சீரமைக்கப்பட்டு, கான்கிரீட் சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மைதானத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, பார்வையாளர்களுக்கான கேலரி, வீரர்களுக்கான பிரத்யேக உடை மாற்றும் அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் 7.5 கோடி ரூபாயை வழங்க ஹாக்கி அசோசியேஷன் முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையின் விளையாட்டு வீரர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையவுள்ள இந்த மைதானம், எதிர்காலத்தில் ஒலிம்பிக் தரத்திலான வீரர்களை உருவாக்க உதவும் என விளையாட்டு ஆர்வலர்கள் பெரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version