அமெரிக்கர்களையே பாதிக்கும் : இந்தியா மீதான வரிவிதிப்புக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு

இந்தியா மீது வரி விதித்த அமெரிக்காவின் முடிவுக்கு, அந்நாட்டின் பார்லிமென்டின் வெளியுறவு கொள்கைக்கான குழுவில் உள்ள ஜனநாயக கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது அமெரிக்கர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா – அமெரிக்கா உறவு நட்புறவாக இருந்து வந்த நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பின் புதிய வரி கொள்கை இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக பற்றாக்குறை கொண்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை கடந்த 7ஆம் தேதி முதல் அமல்படுத்தினார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக கூடுதலாக 25 சதவீத வரி நேற்று முதல் அமலில் வந்தது.

இந்த நடவடிக்கை நியாயமற்றது என இந்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்காகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கான குழுவில் உள்ள ஜனநாயக கட்சியினர் வெளியிட்ட அறிக்கையில்,
“ரஷ்யாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா போன்ற நாடுகள் மீது வரி விதிக்காமல், இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதித்து வருகிறார். இது அமெரிக்கர்களையே பாதிக்கும். இந்தியா – அமெரிக்கா உறவை நாசப்படுத்தும். இது உக்ரைனைப் பற்றிய கொள்கை அல்ல என்பதை காட்டுகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் எந்தவொரு நாட்டுக்கும் தடை விதிக்கும் நிலைப்பாடு எடுக்கப்பட்டிருந்தால் அது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், இந்தியா மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது குழப்பமான கொள்கையை காட்டுகிறது. சீனா மிகப்பெரிய அளவில் தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கி வந்தாலும், அதற்கு தண்டனை விதிக்கப்படவில்லை,” எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version