புதுடில்லி:
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலை 6.52 மணியளவில் சிக்னல் பகுதியில் நின்றிருந்த கார் திடீரென வெடித்ததில் அருகிலிருந்த மூன்று வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன. பரபரப்பான நேரம் என்பதால் அப்பகுதி முழுவதும் குழப்பநிலை ஏற்பட்டது.
வெடிப்பின் அதிர்வு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அருகிலிருந்த கட்டடங்களின் கண்ணாடிகள் சிதறியன. சம்பவத்திற்குப் பிறகு, காவல் துறை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் இணைந்து இடத்தை முற்றுகையிட்டு விசாரணை தொடங்கினர்.
விசாரணையில் கண்டுபிடிப்புகள்
வெடித்த கார் Hyundai i20 மாடலாக இருந்தது. அதன் பதிவெண் (HR 26 CE 7674) அரியானா மாநிலத்தைச் சேர்ந்ததாக உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், கார் முதலில் முகமது சல்மான் என்ற நபருக்குச் சொந்தமானது என்றும், அவர் அதை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் டெல்லி ஓக்லா பகுதியில் வசிக்கும் தேவேந்தர் என்பவருக்கு விற்றதாகவும் தெரியவந்தது.
அதன்பின், காரின் தற்போதைய உரிமையாளர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா அருகே உள்ள ஷம்புரா கிராமத்தைச் சேர்ந்த தாரிக் என்பதும் போலீசாரால் உறுதி செய்யப்பட்டது.
உமர் நபி மீது சந்தேகம்
வெடிப்பு நடந்தபோது காரை ஓட்டி வந்த நபர் உமர் நபி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் ஆவார். 1989-ல் பிறந்த இவர், ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து, பின்னர் அனந்த்நாக் ஜிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். அண்மையில் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-பலா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் தகவலின்படி, உமர் நேற்று மாலை பத்தர்பூர் எல்லை வழியாக டெல்லி வந்தார். அதற்கு முன் ஓல்டு டெல்லி ரயில் நிலையத்தில் உறவினர்களை இறக்கிவிட்டு, செங்கோட்டை அருகே காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்புக்கு முன் அவர் சுமார் மூன்று மணி நேரம் அந்த பகுதியில் தங்கியிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெலிகிராம் வழி தீவிரவாத இணைப்பு?
சமீபத்தில் டெலிகிராம் செயலியில் உருவாக்கப்பட்ட தீவிரவாத குழுவில் பல மருத்துவர்கள் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபரிதாபாத் மற்றும் குஜராத் பகுதிகளில் கைது செய்யப்பட்ட சில மருத்துவர்கள் வழியாக உமரின் பெயரும் புலனாய்வு அமைப்புகளின் கவனத்துக்கு வந்துள்ளது.
அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததால், உமர் தலைமறைவாக இருந்ததாகவும், டெல்லி வெடிப்பில் அவர் பயன்படுத்திய வெடிபொருட்கள் அதே வகையினதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பில் பயன்படுத்திய பொருட்கள்
வெடிப்பு நடந்த இடத்திலிருந்து அம்மோனியம் நைட்ரேட் தடயங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதற்கான உறுதியான சான்றாகும். காரை ஓட்டிய உமர் நபி தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதற்காக, சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட உடல் பாகங்களுக்கான டிஎன்ஏ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புல்வாமா ஒற்றுமை
2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுடன் ஒத்த பாணியில் இந்த வெடிப்பும் நடந்துள்ளதாக விசாரணை அமைப்புகள் கூறுகின்றன. டெலிகிராம் குழுவின் மூலம் ஒருங்கிணைந்த தாக்குதலாக இது இருக்கக்கூடும் என்பதால், தேசிய பாதுகாப்பு அமைப்புகள் முழு நாட்டிலும் எச்சரிக்கை விடுத்துள்ளன.


















