நடிகர் சங்க தேர்தல் தாமதம் – “என்ன சிக்கல் ?” : சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு (நடிகர் சங்கம்) தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் அடிப்படையில் தற்போது உள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் 19-இல் முடிவடைந்தது. ஆனால், கடந்த 2024 செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நடிகர் நம்பிராஜன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பதவிக்கால நீட்டிப்பு செல்லாது என அறிவிக்கவும், உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து புதிய தேர்தலை நடத்தவும் கோரப்பட்டுள்ளது.

இதற்கான பதில் மனுவில், சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால், “சங்கத்திற்காக 25 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 60% வேலைகள் முடிந்துள்ள நிலையில் இப்போது தேர்தல் நடந்தால், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும். இதனால், பொதுக்குழுவில் 300 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, பதவிக்கால நீட்டிப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது” என தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயக அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், எந்த விதி மீறலும் இல்லை என்றும் வாதிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடந்தது. அப்போது, “நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு சங்கம் சார்பில், “புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக தேர்தல் தாமதப்படுத்தப்பட்டுள்ளதே அன்றி, வேறு எந்தத் தடையும் இல்லை” என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்த வழக்கின் விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Exit mobile version