ரூபாய் நோட்டுகளுடன் தீயில் சிக்கிய விவகாரத்தில், டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு, பல எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கடந்த மார்ச் மாதம், டில்லியில் உள்ள யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தின் பின்னர், ஒரு அறையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியும், சர்ச்சையும் எழுந்தது. முறைகேடாக சம்பாதித்த பணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தபோதிலும், நீதிபதி வர்மா அதை மறுத்தார்.
இந்த சம்பவத்தையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து, அங்கு அவருக்கு வேலையோ தற்காலிக பொறுப்போ வழங்க வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இதில் டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, தீயணைப்பு துறை தலைவர் அதுல் கார்க் உள்ளிட்ட 50 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதியை நீக்குவதற்கு இந்திய அரசியல் அமைப்பின் கீழ் ‘இம்பீச்ச்மெண்ட்’ நடவடிக்கை அவசியமாகிறது. அதற்கான சட்டப்பூர்வ நடைமுறையாக, லோக்சபாவில் 100 எம்.பிக்கள் மற்றும் ராஜ்யசபாவில் 50 எம்.பிக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.
வரும் மழைக்கால பார்லிமென்ட் கூட்டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறவுள்ள நிலையில், அந்த கூட்டத் தொடரில் பணி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். எனவே, தீர்மானம் எளிதாக நிறைவேறும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.