மோன்தா புயல் உருவானது : பல மாவட்டங்களில் மழை எச்சரிக்கை !

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் சந்திக்கும் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, ‘மோன்தா’ (Montha) எனப் பெயரிடப்பட்ட புயலாக மாற்றமடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் தாக்கத்தால் அடுத்த சில மணி நேரங்களில் தமிழ்நாட்டின் பல கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவான மோன்தா புயல், நாளை ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், தற்போது கடலில் உள்ளவர்கள் உடனே கரைக்குத் திரும்புமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் சில கடலோர மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version