சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகமாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை புதுப்பிக்கும் நோக்கில், உயர்மட்ட வல்லுநர் குழுவும், கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை சென்னையில் நடத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். அதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் படிப்பினைகளைப் புரிந்து கற்றுக்கொள்கிறார்களா என்பதை உறுதி செய்யும் வகையிலும் ஆலோசனைகள் நடைபெற்றன,” என்றார்.
அதன் தொடர்ச்சியாக, அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படும் கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை எதிர்கொள்ளும் திறனுடன் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடத்திட்ட மாற்றம் ஒரே நேரத்தில் அல்லாமல் படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்தப்படும் என்றும், புதிய பாடத்திட்டத்தின் வரைவு டிசம்பர் மாதத்திற்குள் தயாராகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்
