திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாய் பாரத் கல்வியியல் கல்லூரியில், தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான தைப்பொங்கலை முன்னிட்டு “சமத்துவ பொங்கல் விழா” இன்று மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இளைய தலைமுறைக்குத் தமிழர்களின் கலை மற்றும் கலாச்சார விழுமியங்களைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விழாவிற்கு, கல்லூரியின் நிர்வாக அதிகாரி ஸ்டாலின் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். கல்லூரியின் மேலாளர் பரமேஸ்வரி, பொறுப்பாளர் பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகிக்க, கல்லூரி முதல்வர்கள் சாந்தி, ஜான் வின்செட் மற்றும் துணை முதல்வர்கள் ஜென்சி உமா, நதியா ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர். மதங்களைக் கடந்து மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடிய இந்த நிகழ்வு, சமூக நல்லிணக்கத்திற்குச் சான்றாக அமைந்தது.
விழாவின் ஒரு பகுதியாகக் கல்லூரி வளாகத்தில் புதுப்பானையில் பச்சரிசி இட்டு, “பொங்கலோ பொங்கல்” என்ற முழக்கத்துடன் பொங்கலிட்டு இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்தப்பட்டது. விழாவின் முக்கிய ஈர்ப்பாகத் தமிழர்களின் வீரத்தையும் அழகையும் பறைசாற்றும் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தேவராட்டம் எனத் தமிழகத்தின் கிராமியக் கலைகள் மைதானத்தில் அரங்கேறியபோது மாணவர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மேலும், வீரக்கலையான சிலம்பாட்டம் மற்றும் கிராமியப் பாடல்களான வில்லுப்பாட்டு, கும்மிப்பாட்டு ஆகியவை விழாவிற்கு மெருகூட்டின. பக்தி மணம் கமழ மாணவிகள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் கல்லூரி வளாகத்தைச் சுற்றி வந்து, பாரம்பரிய வழிபாட்டு முறைகளை நினைவுபடுத்தியது.
கலை நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, பழங்காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளை விளக்கும் விதமாகப் பாரம்பரிய உணவுகள் மற்றும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இன்றைய நவநாகரிக உலகில் மறைந்து வரும் சிறுதானிய உணவுகள் மற்றும் மண்பாண்டங்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணரும் வகையில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நிர்வாக அதிகாரி ஸ்டாலின் மற்றும் கல்லூரி முதல்வர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். இன்றைய சூழலில் செல்போன் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள மாணவர்கள், இதுபோன்ற விழாக்களின் மூலம் நமது மண்ணின் கலைகளையும், உழைப்பின் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்வது அவசியம் என விழாவின் இறுதியில் எடுத்துரைக்கப்பட்டது.

















