2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 77 காலியிடங்களுக்காக மொத்தம் 350 வீரர்கள் இந்த ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி 64.3 கோடி ரூபாய் பர்ஸ் தொகையுடனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 43.4 கோடி ரூபாய் பர்ஸ் தொகையுடனும் களமிறங்கியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஏலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனைச் சுற்றி சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி உருவானது. 25 கோடி ரூபாய் வரை ஏலம் உயர்ந்த நிலையில், அதற்கு மேல் செல்ல சிஎஸ்கே அணி பின்வாங்கியது. இதனைத் தொடர்ந்து, 25.20 கோடி ரூபாய்க்கு கேமரூன் க்ரீனை கேகேஆர் அணி தங்களின் அணியில் இணைத்துக் கொண்டது.
2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜாவை வெளியிட்ட சிஎஸ்கே அணி, அதேபோல் 13 கோடி ரூபாய் சம்பளத்தில் இருந்த பதிரானாவையும் அணியிலிருந்து விடுவித்தது. இந்த முடிவு சென்னை ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஏலத்தில் பதிரானாவிற்கு எதிர்பாராத அளவில் போட்டி உருவானது.
2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்திற்கு வந்த பதிரானாவிற்காக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முதலில் போட்டியிட்டன. 15.60 கோடி ரூபாய் வரை ஏலம் உயர்ந்த நிலையில் டெல்லி அணி விலகியது. அதனைத் தொடர்ந்து ஏலத்தில் நுழைந்த கேகேஆர் அணி, 18 கோடி ரூபாய்க்கு பதிரானாவை தங்களின் அணிக்காக தட்டிச் சென்றது.
சிஎஸ்கே-வின் மற்றொரு வாங்குதல்
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசனை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
2026 ஐபிஎல் ஏலத்தில் முக்கிய வீரர்கள் எதிர்பாராத அணிகளுக்கு சென்றது, இந்த சீசனை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது.
