மக்களுக்கு 46 வகையான சேவைகளை வழங்குவதாகக் கூறி நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் ஊழல் நடப்பதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் தொடங்கி நவம்பர் 14 வரை 10 ஆயிரம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 5 ஆயிரம் முகாம்களில் 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், மகளிர் உரிமைத் தொகைக்கே 22 லட்சத்திற்கும் அதிகமான மனுக்கள் வந்துள்ளன. ஆனால் மொத்த மனுக்களில் 80 சதவீதத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இதனால், திட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது.
மக்களுக்கு சேவை செய்ய முடியாமல், திமுக அரசு ஊழலை மட்டுமே வெற்றிகரமாக செய்து வருகிறது. பட்டா மாற்றம், மின்சார இணைப்பு போன்ற கோரிக்கைகளுக்கு வருவாய் மற்றும் மின் துறை அதிகாரிகள் கட்டாய கையூட்டு வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிலங்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு கையூட்டு நிர்ணயம் செய்வதாகவே உழவர் அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. அதைவிட மோசமாக, கையூட்டு கொடுத்தால் நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கட்டிடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள், உண்மையில் ‘உங்களுடன் ஊழல்’ முகாம்களாக மாறிவிட்டன.
இந்த சேவைகள் அனைத்தும் அரசு அலுவலகங்களில் இயல்பாக வழங்கப்படவேண்டியவையே. சேவை உரிமைச் சட்டம் கொண்டு வந்து, அனைத்து சேவைகளையும் காலக்கெடுவில், இணைய வழியாக வழங்கியிருந்தால் இம்முகாம்களின் தேவையே இருக்காது. அதற்கு பதிலாக திமுக அரசு முகாம்களை நடத்தி, விளம்பரங்களின் மூலமாக மக்களை ஏமாற்றி வருகிறது.
தமிழ்நாட்டு மக்கள் இதனை புரிந்து கொண்டுள்ளனர். வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்” என அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.