பாங்காக் : தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவுக்கு, ஊழல் வழக்கில் விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை தவிர்த்ததற்காக, மீண்டும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001 முதல் 2006 வரை தாய்லாந்தின் பிரதமராக பதவியேற்ற தக்சின் சினவத்ரா, தனது ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பைப் பெற்றார். எனினும், அதே நேரத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. 2006ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியால் அவர் பதவி நீக்கப்பட்ட நிலையில், தக்சின் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றார்.
2008ஆம் ஆண்டு தாய்லாந்து திரும்பிய அவருக்கு, ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற தக்சின், அங்கிருந்தபடியே தனது கட்சிகளின் மூலம் அரசியலில் தாக்கத்தைத் தொடர்ந்தார்.
15 ஆண்டுகள் கழித்து, 2023ஆம் ஆண்டு மீண்டும் தாய்லாந்து திரும்பிய தக்சின், உச்சநீதிமன்றம் விதித்த தண்டனையின் அடிப்படையில் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். எனினும், சிறையில் அடைக்கப்பட்ட அதே தினமே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். பின்னர், மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் அவரின் தண்டனையை ஓராண்டாக குறைத்திருந்தார்.
ஆனால், ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தபோதும் அவரின் உடல்நிலை அவ்வளவு மோசமாக இல்லை எனவும், இது சிறை விதிமீறலாகும் எனவும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. அதனால், தக்சின் சினவத்ரா மீண்டும் ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், அவரது மகள் பேடோங்டார்ன் சினவத்ரா பிரதமர் பதவியில் இருந்தபோது, நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி, நீதிமன்றம் அவரையும் பதவி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.