சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல முயன்ற குற்றவாளிக்கு ஆண்மை நீக்க உத்தரவு !

மடகாஸ்கரின் இமெரிண்ட்சியாடோசிகா நகரத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ய முயன்ற நபருக்கு, அந்த நாட்டின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பாக அறுவைசிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை பொறுப்பாக விசாரித்த அரசு வழக்கறிஞர் நடிடியர் ரசாபின்ட்ரலாம்போ, “குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, மேலும் கடுமையான வேலைகளுடன் கூடிய ஆண்மை நீக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற பயங்கரமான எண்ணங்கள் கொண்டவர்களுக்கு இது ஒரு கடும் எச்சரிக்கையாக இருக்கும்,” எனக் கூறினார்.

கடந்த ஆண்டு, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றங்களுக்கு எதிராக, மடகாஸ்கர் அரசு கடுமையான சட்டத்தை அமல்படுத்தியது. இதன் ஒரு பகுதியாகவே இத்தரப்பட்ட தீர்ப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

பாலியல் குற்றங்களுக்கு இவ்வாறான தண்டனைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், செக் குடியரசு, ஜெர்மனி, அமெரிக்கா, போலந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவின் லூசியானா மாநிலம், கடந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு வேதியியல் ஆண்மை நீக்கம் முறையை கட்டாயமாக்கிய முதல் மாநிலமாக உருவெடுத்தது.

இவை தவிர, பல நாடுகளில், தொடர்ச்சியான மருந்துகள் மற்றும் மீளக்கூடிய மருந்துகளின் மூலம் வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் நடைமுறையில் உள்ளது. பிரிட்டன் இந்த நடைமுறையை கட்டாயமாக்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது.

இதேவேளை, மனித உரிமை அமைப்புகள், இத்தகைய உடலியல் மற்றும் வேதியியல் தண்டனைகள் மனித உரிமைக்கேற்ப அல்ல எனக் கண்டனம் தெரிவித்தும் வருகின்றன.

Exit mobile version