பாமக அலுவலக முகவரி மாற்றம் தொடர்பான சர்ச்சை ; ஜி.கே. மணிக்கு எதிராக வழக்கறிஞர் கே. பாலு விமர்சனம்

பாமகவில் தந்தை-மகன் இடையேயான அரசியல் பிளவு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கட்சியின் தலைமை அலுவலக முகவரி மாற்றம் குறித்த விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மீண்டும் பாமகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தீர்மானம் தேர்தல் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அதற்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் கடிதப்படி, அன்புமணி ராமதாஸ் 2026 ஆகஸ்ட் 1 வரை கட்சித் தலைவராக தொடருவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாமக தலைமை அலுவலக முகவரியாக சென்னை தியாகராய நகர், திலக் தெருவிலுள்ள முகவரி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கே. பாலு விளக்கமளித்தார். இதன் மூலம், பாமகவில் தனித்தனி அணிகள் என்ற குழப்பம் இனி இல்லை; அன்புமணி தலைமையிலேயே கட்சி இயங்குகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “பாமகவின் நிரந்தர அலுவலக முகவரி தேனாம்பேட்டையில் உள்ள நாட்டு முத்து நாயக்கன் தெருவே. தி நகர், திலக் தெருவுக்கு மாற்றியிருப்பது மோசடி. தேர்தல் ஆணையக் கடிதம் காட்டி மக்களை தவறாக நம்ப வைக்க முயலப்படுகிறது” என அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த கே. பாலு, “அன்புமணி தலைமையை ஏற்றுக்கொண்டதும் அலுவலகம் தேனாம்பேட்டையில் இருந்து தியாகராய நகர் மாற்றப்பட்டது. இதை ராமதாஸும் அறிந்தவரே. தேனாம்பேட்டை அலுவலகம் செல்வதற்கு கட்சியினருக்கு சிரமமாக இருந்தது. வாகன நிறுத்த வசதியும் இல்லாததால் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது இதை மறந்து பேசுவது, 25 ஆண்டுகள் தலைவராக இருந்த ஜி.கே. மணிக்கு அழகல்ல” என்று தெரிவித்தார்.

தற்போது தேர்தல் ஆணையத்தின் கடிதம் குறித்து அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இருவரும் எந்தப் பதிலும் அளிக்காத நிலையில், அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்வம் எழுந்துள்ளது

Exit mobile version